ஆரம்ப காலத்தில் ஜப்பானியர்களால் கைது செய்யப்பட்ட ஆங்கிலேய இந்திய ராணுவத்தின் இந்திய போர்க்கைதிகள் இதில் இடம் பெற்றிருந்தனர். பின்னர் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழும் புலம்பெயர் இந்தியர்களும், இந்தியாவிலிருந்து சென்ற தன்னார்வலப் படைவீரர்களும் இதில் இடம் பெற்றனர். இதன் படைத்தலைவர் மோகன் சிங் ஆவார்.ஆனால் விரைவில் அது ஆதரவின்றி கலைந்து போனது. மீண்டும் 1943 இல் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ் அவர்களால் புத்துயிர் அளிக்கப்பட்டு மீட்டுருவாக்கப்பட்டது.
நேதாஜி அவர்களின் இந்திய இடைக்கால அரசான ஆசாத் ஹிந்தின் படைத்துறையாக செயலாற்றியது. ஜப்பானியப் படைகளுக்குத் துணையாக மலேசியா மற்றும் பர்மாவில் ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போரிட்டது.\n \n ஜப்பானிய இராணுவத்துடன் கூட்டு சேர்ந்து இம்பால் மற்றும் கோஹிமா ஆகிய முற்றுகையிட்டது.
ஜப்பானியர்களிடமிருந்து பெற்ற மோசமான ஆயுதங்கள், பயிற்சி உதவியின்மை ஆகியவற்றால் இந்திய தேசிய ராணுவம் தோல்வியுற்றது. ஜப்பான் சரணடைந்ததைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தின் துருப்புக்கள் இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட்டு ராஜதுரோக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்திய தேசிய ராணுவப் போர்வீரர்களின் விசாரணையின்போது வெளிச்சத்திற்கு வந்த ஆஸாத் ஹிந்த் மற்றும் அதன் ராணுவத்தின் கதைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் வெகுமக்கள் கலகங்களும் கிளர்ச்சிகளும் ஏற்படலாம் என்ற அச்சத்தை கொழுந்துவிட்டு எரியச் செய்வதாக இருந்தது. இந்திய தேசிய இராணுவத்தின் பற்றிய செய்திகளைபிபிசி (BBC) ஒலிபரப்புவதை ஆங்கிலேய அரசாங்கம் தடைசெய்தது.
செங்கோட்டையில் இந்திய தேசிய ராணுவத்தினருக்கு கூட்டாக தண்டனை நிறைவேற்றப்பட்டதை செய்தித்தாள்கள் தெரிவித்தன. விசாரணையின்போதும் அதற்குப் பின்னரும் ஆங்கிலேயே அரசின் கீழ் இருந்த இந்திய ஆயுதப் படைகளுக்கிடையே கலகங்கள் மூண்டன, அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது ராயல் இந்திய கடற்படையின் கலகம் இந்தியா முழுவதிலும் பொதுமக்கள் ஆதரவைக் கண்டது.
இந்தியாவின் இறுதிக்கட்ட சுதந்திரத்திற்கான முக்கிய இயக்கு சக்தியாக இருந்தவை ஆங்கிலேய இந்திய ஆயுதப் படையினருக்கிடையே தாக்கத்தை ஏற்படுத்திய இந்திய தேசிய ராணுவமும் அதனுடைய கலகங்களும் ஆகும்.
சுமார் 43,000 உறுப்பினர்களைக் கொண்ட இப்படை போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் இதன் உறுப்பினர்கள் மீது ஆங்கிலேய அரசு சாட்டிய குற்றங்களும், அது தொடர்பான வழக்குகளும் இந்திய மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின, இந்திய விடுதலைக்கு வித்திட்டன.
0 Comments