ஜனவரி 23, 1897-ம் வருடம் ஜானகிநாத் போஸ்- பிரபாவதி தேதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குடும்பத்தின் 14 குழந்தைகளில் 9-வது குழந்தை போஸ்!
கல்கத்தா மாநிலக் கல்லூரியில் படிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைச் சொன்னதால், பேராசிரியர் ஓடென் என்பவரைத் தாக்கினார் போஸ், அதற்காக, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஐ.சி.எஸ். தேர்வில் தேறிய போஸ், லண்டனில் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போதுதான் இந்தியாவின் ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரம் அரங்கேறியது. அது அவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டிவிட, 1921-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியா திரும்பினார்!
சித்தரஞ்சன் தாஸ்தான் நேதாஜியின் குரு. அவரின் வழிகாட்டுதலில்தான் காங்கிரஸில் இணைந்தார். `ஸ்வராஜ்’என்ற பத்திரிகையிலும் பணியாற்றினார்!
`நான் தீவிரவாதிதான். எல்லாம் கிடைக்க வேண்டும். அல்லது ஒன்றுமே தேவை இல்லை என்பதுதான் எனது கொள்கை!’ – 1938ம் ஆண்டு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இப்படி முழங்கினார்!
போஸ், காங்கிரஸ் தலைவரானதும், மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவரை சாந்திநிகேதனுக்கு அழைத்துப் பாராட்டு விழா நடத்தினார். அப்போதுதான் போஸீக்கு `நேதாஜி’ என்ற பட்டத்தை அளித்தார் தாகூர். `மரியாதைக்குரிய தலைவர்’ என்பது அர்த்தம்!
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குத் தலைமை ஏற்று நடத்திய ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் உத்தம் சிங். அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், உத்தம் சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் நேதாஜி, காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான உரசலை அதிகமாக்கிய சம்பவம் இது!
1939 –ல் இரண்டாவது முறையாக காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தினார். போஸ். 1,580 வாக்குகளுடனும், சீதா ராமையா 1,371 வாக்குகளுடனும் இருந்தனர். சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி!
பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த சுபாஷ், 1941 ஜனவரி 17அன்று தப்பினார். பெஷாவர் வழியே காபூல் தொட்டு,கைபர் கணவாய் வழியாக நடந்தே ஆஃப்கானிஸ்தானை அடைந்தார். பிறகு இத்தாலிக்குச் சென்று, இந்துகுஷ் கணவாய் வழியாக ரஷ்யாவில் நுழைந்து, மாஸ்கோ சென்றார். இப்படி 71 நாட்கள் பயணித்து இறுதியில் அவர் பெர்லின் அடைந்ததை `Great Escape’ என்று சிலாகிக்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்!
திருமணம் செய்துகொள்வதில்லை என்ற முடிவில் இருந்தார். ஆனால், 1934-ல் ஆஸ்திரியப் பெண்மணி எமிலி ஷெங்கலைச் சந்தித்ததும், அவர் மனதில் காதல் துளிர்விட்டது. இரண்டு ஆண்டுக் காதலின் சாட்சியாகப் பிறந்தவர்தான் அனிதா, ஜெர்மனியில் இருந்து நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் செல்லும் சூழலில் விடைபெற்றது தான் எமிலியுடனான இறுதிச் சந்திப்பு!
ஜெர்மனியில் இருந்தபோது இவர் ஆரம்பித்த `இந்திய சுதந்திர அரசு’ என்ற அமைப்புக்கு, ஜெர்மன் அரசு நிதி உதவி அளித்தது. 1944-ம் ஆண்டின் இறுதியில் அந்தக் கடனைக் கழிக்கும் விதமாக, இந்திய நாட்டு மக்களிடம் திரட்டப்பட்ட நிதியில் இருந்து 50 லட்சம் யென் பணத்தை டோக்கியோவில் இருந்த ஜெர்மன் தூதரிடம் அளித்தார் நேதாஜி!
இன்னும் உயிரோடு இருக்கும் சுபாஷ் சந்திரபோஸ் பேசுகிறேன்!’ இப்படித்தான் நேதாஜியின் முதல் வானொலி உரை தொடங்கியது, 1944-ல் `ஆசாத் ஹிந்த்’ வானொலியில் உரை நிகழ்த்தியபோதுதான் மகாத்மா காந்தியை,`தேசப்பிதா’ என்று முதன்முதலில் அழைத்தார்.
சிங்கப்பூரில் 1942-ம் வருடம் மோகன் சிங் என்பவரால்தான் முதன்முதலில் இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டது. அது ஜப்பானியப் படைகளால் சிதைக்கப்பட்டது. மீண்டும் 1943-ல் நேதாஜியின் தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
தனது இந்திய தேசிய ராணுவத்துக்குத் தாரக மந்திரமாக `ஜெய் ஹிந்த’.... அதாவது, `வெல்க பாரதம்’ என்ற சொல்லைப் பரவலாக்கியவர் நேதாஜி, அந்தச் சொல்லை நேதாஜிக்கு அறிமுகப்படுத்தியவர் செண்பகராமன் பிள்ளை என்ற தமிழர்!
பர்மாவின் மேஜர் ஜெனரல் ஆங் சான் என்னும் புரட்சித் தளபதி தலைமையில் பர்மியப் புரட்சி ராணுவம் ஜப்பானியரை எதிர்த்துப் போராடியது. அந்தப் புரட்சிப் படையை ஒடுக்க நேதாஜியின் உதவியை ஜப்பானியர் கேட்டனர். ஆனால், நேதாஜி மறுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், `இந்திய தேசிய ராணுவம் என்பது ஒரு கூலிப் படை அல்ல!’
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பார்மோசா வழியாக மன்சூரியா செல்ல, நேதாஜி தன் தோழர் ஹபீப்புடன் விமானத்தில் ஏறினார். ஆகஸ்ட் 18-ம் தேதி தைபேவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் நேதாஜி இறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், தைவான் அரசாங்கமோ... அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை என்கிறது. இதுவரை 12 கமிஷன்கள் வைத்து விசாரித்தும் ஒரு பயனும் இல்லை. நேதாஜியின் மரணம் இன்றும் மர்மம்!
ஒரு இந்தியனின் புனித யாத்திரை’ இவர் எழுதி முற்றுப் பெறாத சுயசரிதை, 1937-ல் எழுத ஆரம்பித்தார். 1921 வரை தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை எழுதினார். `என்னுடைய நம்பிக்கைத் தத்துவம்’ என்று தலைப்பிட்டு தனியே ஒரு கட்டுரையுடன் சேர்த்து இவர் எழுதியது 10 அத்தியாயங்கள் மட்டுமே!.
0 Comments